Wednesday, January 25, 2023

கமலும் அரசியலும்

2023ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான திரு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து அதிகாரப்பூர்வமாக திமுக தலைமையிலான கூட்டணிக்குள் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியை கொண்டு வந்துள்ளார். திமுக தலைவரும் இவரது வருகையை ஆதரித்து வரவேற்றுள்ளார். மிகச்சில கமல் ரசிகர்களும், சில திராவிட சிந்தனை உடைய அன்பர்களும் இதனால் மகிழ்கின்றனர். 

ஆனால் இது மகிழ்வுக்குரியதா? அரசியல் தெளிவுடன் அந்த முடிவு எடுக்கப்பட்டதா? மதத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு நடத்தப்படும் இன்றைய அரசியல் சூழல் புரிந்து இந்த கூட்டணியை தேர்ந்தெடுத்தாரா? மிக நீண்ட காலம் பொதுவில் தன்னை கடவுள் நம்பிக்கை அற்றவராகவும், பகுத்தறிவுவாதியாகவும், பெரியாரின் சீடராகவும் வெளிக்காட்டிக்கொண்ட கமல் இயல்பாக தேர்ந்தெடுத்த தோழமையா? என்ற இத்தனை கேள்விகளுக்கும் பதில் தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 

2018ஆம் ஆண்டு கமல் இந்த மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்குகிறார். அதற்கு சில மாதங்கள் முன்பாகவே தான் தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவதை தில்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு ஆங்கில செய்தி தொலைகாட்சியில் அறிவிக்கிறார்.

 அவர் தனது அரசியல் வருகையை அறிவித்த தருணம் தமிழகத்தில் ஜெயலலிதா, கலைஞர் என்று இரு பெரும் தலைவர்கள் மறைந்த பிறகு, இந்திய ஒன்றியத்தை மதத்தை வைத்து ஆளும் பாஜகவின் பொம்மையாக செயல்பட்டு வந்த அதிமுகவின் அரசால் ஆளப்பட்டு வந்தது. 

அதிமுக தொடங்கிய காலம் முதல் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலம் வரை காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் போல திமுகவை மூர்க்கமாக எதிர்த்தாலும் திராவிட அரசியலின் அடிப்படை கோட்பாடுகளை விட்டு விலகாமல்  எதிரில் கலைஞர் (திமுக) என்னும் துருவம் பார்த்துக்கொண்டது. தனது ஒற்றைத் தலைமையை இழந்த பின்னர் மீதமுள்ள நான்காண்டு ஆட்சிக்காலத்தை காப்பாற்றிக்கொள்ள ஒபிஎஸ், சசிகலா, ஈபிஎஸ் செய்த கோமாளித்தனங்களை இந்த நாடே கண்டுகளித்தது. இறுதியில் அதிகமாக ஏலம் கேட்டு் ஈபிஎஸ் தலைமையை கைபற்றினார். கமிஷனுக்கும், சம்பாத்தியத்துக்கும் ஒன்று சேர்ந்த கூட்டம் தமிழ்நாட்டின் உரிமையை, தனித்துவத்தை ஒன்றிய பாஜகவின் காலடியில் சமர்பித்து தனது கல்லாவை நிரப்புவதில் குறியாய் இருந்தது. 

இந்த சூழ்நிலையில் தான் கமல் தன் அரசியல் நுழைவை அறிவிக்கிறார். திராவிட சிந்தனை சார்புள்ளவனும், கமல் ரசிகரும் ஆன நான் கமலின் அரசியல் நுழைவை மனதார வரவேற்றேன். ஆட்சியை இழந்தபின்னர் கரைந்து ஓடும் அதிமுகவுக்கு மாற்றான ஒரு வலுவான எதிர்கட்சியாக கமல் உருவெடுப்பார் என நம்பினேன். திமுகவுக்கு நிகரான ஒரு கொள்கையுடன் எதிர் துருவமாக அமர்ந்து தமிழகத்தை திராவிட பாதையில் கொண்டு செல்ல உதவுவார் என நம்பினேன். 

ஆனால் நான் எவ்வளவு அப்பாவியாக அதீத நம்பிக்கை வைத்திருந்தேன் என கட்சியின் தொடக்க விழாவிலேயே தெரிந்தது. தமிழின் தனித்துவத்தை, அடையாளத்தை  காப்பார் என நான் நினைத்த கமல் தன்னை கட்சியின் "ஸ்தாபகத் தலைவராக" அறிவித்துக்கொண்டது முதல் சறுக்கல். 

கட்சியின் தொடக்க விழாவை ஒட்டுமொத்த தமிழ்நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிகழ்வில் கமல் தனது கட்சியின் அடிப்படை கொள்கையினை அறிவிப்பார் என நம்பினேன். அது அவர் இனி பயணிக்கும் பாதைக்கு அச்சாரமாக அமையும், ரசிகர்களில் இருந்து கட்சித் தொண்டர்களாக மாறியவர்களுக்கு ஒரு கைவிளக்காக இருக்கும் என நம்பினேன். 

ஆனால் தொடக்க விழாவை ஒரு பிறந்தநாள் பார்ட்டியை போல் நடத்தியது ஒரு அரசியல் ஆர்வலனாக எனக்கு வெறுமையை தந்தது. கட்சியின் கொள்கையை பற்றிய கேள்விக்கு புத்தகம் அடித்துக்கொண்டு இருக்கிறோம் அதை பின்னால் தருகிறோம் என முடித்துக்கொண்டார். கமலிடம் நான் என்ன கார்ல்மார்க்ஸ்ஸைப் போல் டாஸ் காப்பிடலையா எதிர்பார்த்தேன். வெகுஜன மக்களுக்கு புரியும் அளவுக்கு சில கொள்கை அறிவிப்புகளை மட்டும் தானே எதிர்பார்த்தேன். 

அடுத்து அவர் எடுத்த "மய்ய" நிலை. அது கட்சியின் பெயரிலேயே எதிரொலித்தது. தமிழ்நாடே அரசியல் உணர்வுகளால் பொங்கிக் கொண்டு இருந்த பொழுது இவர் மய்யத்தில் இருப்பேன் என்றார். வெண்டைக்காயை விளக்கெண்ணையில் வதக்கியது போல ஒரு தெளிவில்லாத நிலை.

ஒரு சண்டை நடந்துகொண்டிருந்த பொழுது அங்கு மூன்றாவதாக இருந்தவர், ஒன்று நான் அடித்தவன் பக்கம் நிற்கிறேன் அல்லது அடிவாங்கியவன் பக்கம் நிற்கிறேன் என்பது தான் தெளிவான நிலை. சண்டையை சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தவர் பஞ்சாயத்துக்கு வரும் பொழுது ஏதாவது ஒரு பக்கத்தை கண்டிப்பாக எடுத்தே ஆக வேண்டும். 

மய்ய நிலையும் ஒருவர் கண்டிப்பாக எடுக்கலாம். ஆனால் எப்பொழுது  தெரியுமா? சண்டை நடக்கும் பொழுது அந்த இடத்தில் இல்லாதவர், அதை பார்க்காதவர் தான் எந்த ஒரு பக்கமும் சாயாமல் மய்ய நிலை எடுத்து, விசாரித்த பிறகு தீர்ப்புக்காக ஏதோ ஒரு பக்கம் கண்டிப்பாக சாய வேண்டும். 

கமல் என்ன வெளிநாட்டிலா இருந்தார்? இங்கு நடந்த, நடக்கும் களேபரங்களை, அரசியல் கூத்துகளை, மதவாத அரசியலை, தமிழ்நாட்டின் மானத்தை ஒன்றின் பாஜகவின் காலடியல் அடகு வைத்த கொடுமையை எல்லாம் பார்த்த பிறகு தானே அரசியலுக்கு வருகிறார், பிறகு ஏதோ ஒரு பக்கம் நிற்க ஏன் யோசித்தார்?

கமலின் இந்த மய்ய நிலை யாருக்கு லாபம் தந்தது? வெளிப்படையாக மதவாத பாஜகவை ஆதரிக்க இயலாத, திராவிட அரசியலின் மீதான வெறுப்பை வெளிப்படையாக காட்ட இயலாத கோழைகளுக்கு ஒரு புகலிடமாக மாறினார். இதே அரசியலை 2018 முதல் 2022 என நான்கு முழுமையான ஆண்டுகளுக்கு நடத்தினார். ஓரளவு அரசியல் புரிதல் உள்ள தமிழ்நாட்டில் இவரது மய்ய பருப்பு வேகவில்லை என்பது தான் உண்மை. அவரை விட்டு பலர் விலகினர், ஆரம்பித்த வேகத்தில் கட்சியும் கரைய ஆரம்பித்தது. அரசியல் களத்தில் குரலே இல்லாதவர் ஆனார். 

இந்த நிலையில் தான் அவர் கடேசியாக திமுக கூட்டனிக்கு வந்துள்ளார். இது கொள்கைத் தெளிவால் எடுக்கப்பட்ட முடிவென்றால் அதை முதலில் வரவேற்பவன் நான் தான். ஆனால் கமல் இன்று கரை ஒதுங்கியிருக்கறார். ஒதுக்கப்பட்டதால், பலம் இழந்ததால் நிழல் தேடி வந்துள்ளார். இது அரசியலில் உள்ள எண்ணிக்கை கணக்கு. கொள்கை கணக்கு அல்ல. 

ஆகவே ஒரு திராவிட ஆதரவாளனாக, கமலின் அன்றைய ரசிகனாக எனக்கு இந்த முடிவு மகிழ்ச்சியும் தரவில்லை, வருத்தத்தையும் தரவில்லை. அரசியல் வானில் இன்றைய நிலையில் கமல் ஒரு insignificant player. சரி ஏன் அப்படி ஒரு insignificant playerருக்காக இவ்வளவு பெரிய பதிவு என்றால் நானும் அவரை ஒரு காலத்தில் நம்பியவன் என்ற முறையில் எனக்கு நானே எழுதிக்கொள்ளும் விளக்க உரை இது. 

Monday, October 17, 2011

இருந்து பாடிய இரங்கற்பா! - கவியரசு கண்ணதாசன்


பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
   கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
   வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
   சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
   என்சொல்லி வருந்து வேனே!
தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
   செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
   வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
   மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
   போகுமிடம் தனிமை தானே!
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
   தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
   கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
   காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
   எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
   சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
   இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
   கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
   கொண்டவன் தான் புறப்ப டானோ!
வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
   கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
   கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
   என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
   நாம்கேட்டால் பொருள்செய் யானோ!
கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
   பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
   வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
   தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
   பூப்பூத்த கோல மென்னே!
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
   என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
   என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
   படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
   அவன்பாட்டை எழுந்து பாடு!