Monday, October 17, 2011

இருந்து பாடிய இரங்கற்பா! - கவியரசு கண்ணதாசன்


பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
  கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
  வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
  சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
  என்சொல்லி வருந்து வேனே!
தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
  செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
  வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
  மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
  போகுமிடம் தனிமை தானே!
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
  தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
  கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
  காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
  எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
  சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
  இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
  கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
  கொண்டவன் தான் புறப்ப டானோ!
வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
  கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
  கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
  என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
  நாம்கேட்டால் பொருள்செய் யானோ!
கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
  பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
  வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
  தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
  பூப்பூத்த கோல மென்னே!
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
  என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
  என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
  படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
  அவன்பாட்டை எழுந்து பாடு!

Friday, October 14, 2011

அரசு இயல் – பாகம் 1.


அரசு இயல் – பாகம் 1.

கொஞ்சம் அரசியல் பேசுவோமா? ஓடாதீங்க.. ஓடாதீங்க.. கொஞ்சம் இருங்க…பொறுமையா படிங்க..

இது எந்த தனிப்பட்ட அரசியல் கட்சியப் பற்றியோ, இல்ல தலைவரைப்  பற்றியும் ஆன பதிவு அல்ல. நமக்காகவே நாமே உருவாகிக் கொண்ட, இல்லை யாரோ உருவாக்கிக் தந்துவிட்டுப் போன நமது ஜனநாயகம் மற்றும் அதில் இருக்கும் அரசியல், முக்கியமா நாம் செய்ய வேண்டிய அரசியல் சார்ந்த எனது பார்வை.

இன்னைக்கு நம்ம நாடு என்ன நிலைமையில இருக்குன்னு உங்களுக்கு நல்லா தெரியும். எத்தனை குறைகள், எத்தனை பிரச்சனைகள், எவ்ளோ லஞ்சம், எந்த அளவு ஊழல் எல்லாம் தெரியும். இதப்பத்தி பேசினா நேரம், காலம் தெரியாம பேசுவோம். எல்லாக் குறைகளயும் வரிசையா சொல்லுவோம்.

சரி.. குறை சொல்றோம்.. எல்லாம் தெரிஞ்சு என்ன செய்றோ? நாம என்ன செய்ய முடியும்? நம்மிடம் எந்த விதமான பதவியும், அதிகாரமும் இல்லை. நம்மிடம் ஆள் பலம், பண பலம் இல்லை. ஆனால், மிக முக்கியமான, அவசியமான, முன்பு சொன்ன எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்த ஒன்றான “பொறுப்பு” நம்மிடம் இருக்கிறது. ஆங்கிலத்தில் “RESPONSIBILITY”. ஆமாம். நம்மிடம் இருக்கும் இந்த பொறுப்பு எந்நேரமும் துடிப்புடன் இருந்தால், எந்த தவறும் நடக்காமல் 75 சதவிகிதம் வரை குறைக்கலாம்.

எப்படி தவறுகளை குறைக்கிறது? நாம பொறுப்பா இருந்தா எல்லாத் தவறும் உடனே குறையுமா? இதற்கு பதில்.. எல்லாத் தவறும் குறையாது, உடனேவும் குறையாது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சமூகம் சார்ந்த பெரும்பாலான பிரச்சனைகள் எந்தக் காலத்திலும் உடனே தீராது, மாறாது. குறைந்தபட்சம் ஒரு தலைமுறைக் காலமாவது ஆகும். இது தேவர் மகன் வசனம் போல் தான். விதை நீங்க போட்டது, ஆனா பழம் அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கும், ஆனா நிச்சயமாக உங்கள் வம்சத்திற்க்கு பழம் கிடைக்கும். அதே போல் நீங்கள் இந்தத் தலைமுறையில் முயற்சி செய்தால், அரசியல் மாற்றம் நிச்சயமாக அடுத்த தலைமுறையில் நிகழும். அதற்கு அடுத்த தலைமுறைக்கு தூய அரசியல் கிடைக்கும். இந்த மாற்றத்தை நீங்கள் துவக்காவிட்டால், இது இன்னும் ஒரு தலைமுறைக்கு தள்ளிப்போகும். அவர்களும் செய்யாவிட்டால்? அதனால் நல்லதை நாமே தொடங்குவோம்.

நல்லதை நாம் தொடங்கினாலும் சரி, தொடங்காவிட்டாலும் சரி, கெட்ட அரசியல் அல்லது தவறான அரசியல் நிச்சயமாக இந்த தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்கப்படும். அந்த பரிசால் பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமில்லாமல் நமது சந்ததியனரும் தான். எப்பொழுது ஆரோக்கியமான அரசியல் அடுத்த தலைமுறைக்கு நிறைய கையளிக்கப்படுகிறதோ, அப்பொழுது தான் நீங்கள் இட்ட விதை பழுக்க ஆரம்பிக்கும். ஊழல் குறைந்து, அடிதடி இல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனும் சந்தோஷமாக வாழ முடியும், நிம்மதியாக சாகக் கூட முடியும். இந்த அனைத்தும் நிறைவேற, நான் ஏற்கனவே சொன்னது போல் “பொறுப்பு” (RESPONSIBILITY) மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

சரி.. முக்கியமான இந்த “பொறுப்பு” எந்த விதத்தில் உதவும்? நாம பொறுப்பா எப்படி செயல்படுறது? இந்த பொறுப்ப வச்சு என்னவெல்லாம் செய்யலாம், சாதிக்கலாம்?

இவை அனைத்திற்க்கும் விடை இரண்டாம் பகுதியில்….